திங்கள், 5 ஆகஸ்ட், 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகச் சிறுகதைகள்

ஜெமோவை நினைக்கும் போது கர்நாடக இசைக் கலைஞர் எம்.டி. இராமநாதன் அவர்கள் நினைவு தான் வரும். MDR  பாடுவதைப் பிடித்தவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள் என இரண்டு பிரிவு தான் உண்டு. அது போல் தான் ஜெமோவும்.

ஜெமோ புதிய, இளம் எழுத்தாளர்கள் எழுதிய பன்னிரெண்டு சிறுகதைகளைத்  தன் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதை எழுதியவர்களுக்கு இது பெரிய ஊக்கம். அவர் கிட்டத்தட்ட 160 கதைகளில் இருந்து இதனை வடிகட்டியிருக்கிறார். நமக்கும் நோகாமல் நொங்கு தின்ற மாதிரி தான். மற்ற எழுத்தாளர்களும் இப்படி சிபாரிசு செய்தால் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு வசதியாக இருக்கும். இந்தக் கதைகளை படித்தேன். சில கதைகளை இரண்டு தடவை கூட. சரி என் மனதில் தோன்றியதை எழுதுவோமே என்ற எண்ணம் தான்.

முதலில் இரண்டு கதைகளை எடுத்துக் கொள்கிறேன். இரண்டும் இசையோடு சம்மந்தப்பட்டது. சோபானம் மற்றும் பீத்தோவனின் ஆவி. ராம் மற்றும் வேதா எழுதியது. ராம் முன்பு ஜெமோ தளத்தில் கடுமையான இசை குறித்த விமர்சனங்கள் எழுதியதைப் படித்த நினைவிருக்கிறது. ஆனால் இந்த சோபானம் கதையை சங்கராபரணம் சினிமாவில் வரும் “மானச சஞ்சரரே” பாடல் காட்சி போல் மிகவும் ரம்யமாக எழுதியுள்ளார். இந்தக் கதையில் ராஜமையர் பாத்திரம் முழுமை பெற்று நன்றாக வந்திருக்கிறது. அவர் கான் சாகேபின் காலில் விழுவதைப் படித்த போது, ஏதோ உண்மை சம்பவத்தை புனைவில் முயல்கிறார் எனத் தோன்றியது. அது அவ்வளவு நன்றாக வந்ததாகத் தெரியவில்லை. கான் சாகேப் சங்கீதத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு, தன்னையே அதில் இழந்து விடுகிறார். அது கச்சிதம். இதைக் கதைத் தலைப்பில் கூறிவிட்டார் எனத் தோன்றுகிறது. ஆனால் சாகேப் எண்ண ஓட்டம் சரியாகப் பிடபடவில்லை. அவருக்கும், அவர் சிஷ்யனுக்கும் உள்ள உறவு ஏதோ அந்தரத்தில் நிற்கிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை நெடுக்கதை எழுதி அதனை சிறு கதையாக மாற்றி இருப்போரோ? ஈஸ்வரோ ரட்சது. மோக முள் நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அடுத்ததாக வேதா அவர்கள் எழுதிய பீத்தோவனின் ஆவி. இந்தக் கதையைப் படித்தவுடன் பெரிய பூனை செல்ல பெரிய ஓட்டை, சிறிய பூனை செல்ல சிறிய ஓட்டை செய்து வைத்த மிகப் பெரிய விஞ்ஞானியின் நினைவு தான் வந்தது. காலமெல்லாம் பீத்தோவன் இசையை உலகமெல்லாம் வாசித்துப் புகழ் பெற்ற ஒருவருக்குத் தன் திறமையே தெரியாமல் அல்லது குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறார். ஆனால் இசையில் பெரிய அளவு பரிச்சியமில்லாத ஒருவனால் தன்னை அறிந்து கொள்கிறார். அடிப்படையில் கிழக்கு மற்றும் மேற்கின் இசை, இசை அனுபவம் எல்லாம் ஒன்று தான் என்கிறார் வேதா. கதையின் வடிவமைப்பு நன்றாக வந்துள்ளது.படிப்பதற்கு குழப்பமில்லாமல் சுகமாகச் செல்கிறது.  கதையை ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தி முடிவைக் கொடுக்காமல், வாசகனிடம் விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ? ஜெமோ அவர் தளத்தில் கூறியுள்ளதைப் போல் தி.ஜா வின்  கதை நினைவில் வராமல் போகாது.

இரண்டு கதைகளையும் படிக்கவில்லை என்றால், சுட்டிகள் கீழே:


 சரிதான். அவரவர் அனுபவம் அவரவருக்குஎன்றார் சாகேப் என சோபானம் கதையில் வருவது போல் இது எனது அனுபவம்.

5 கருத்துகள்:

  1. நல்ல பதிவு சார்..

    நானும் இந்தக் கதைகளைப் பற்றி எழுதி அனுப்பினா போஸ்ட் செய்வீர்களா?

    பதிலளிநீக்கு
  2. கட்டாயம் நட்பாஸ். எழுதி அனுப்புங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றிங்க. இன்று அனுப்ப முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஹரன் பிரசன்னாவின் கதை பற்றியும் சுனில் கிருஷ்ணனின் கதை பற்றியும் உங்களுடைய அபிப்ராயம் ?

    பதிலளிநீக்கு
  5. நிச்சியம் எழுதுவோம். அடுத்ததாக ராஜகோபாலன் அவர்கள் கதைகள் குறித்து இன்று கருத்து கூற உத்தேசம். மேலும் நண்பர் நட்பாஸ் இங்கு அவர் அனுபவத்தை பகிர்ந்துகொள்வார்..

    பதிலளிநீக்கு