வியாழன், 30 டிசம்பர், 2010

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்


1970-80 களில் இரண்டு பெரிய சமூகப் பிரச்சனைகள் இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்தன. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வரதட்சணைக் கொடுமை. இதை மையமாகக் கொண்டு பல சிறுகதைகள் (விகடன், குமுதத்தில்) மற்றும் புதுக் கவிதைகள் எழுதப்பட்டன. வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள் போன்ற வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிறுத்தி திரைப்படங்கள் வந்தது நினைவிருக்கலாம்.

இந்த சட்டகத்தை வைத்து இருபத்திமூன்று வயதான ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் உறவுச் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களை மிக அழகாக,யதார்த்தமாக சித்தரித்துள்ளார் நாஞ்சில் நாடன். ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் நாயகன் சிவதாணு. வேலை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்து தன் பெண் பார்வதியை படித்த பையனான சிவதாணுவுக்குக் கட்டிக் கொடுக்க முனையும் சொக்கலிங்கம் பிள்ளை.

முதலில் துள்ளிக் குதித்தாலும், பிறகு திருமணத்திற்கு சம்மதிக்கும் சிவதாணு. பணத்திற்கு கஷ்டமில்லாத மாமனார் வீடு. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளையை வீட்டிலேயே வைத்துக் கொள்ள முயற்சிக்கும் மாமனார். சிவதாணுவின் வீட்டு ஏழ்மையை வைத்து "ஆறாத நாவினால் சுடும்" சொல் அம்புகள் மாமியார் நீலாப்பிள்ளை வார்த்தைகளில். இறுதியில் சிவதாணுவுக்கு ஒரு வேளை கிடைத்து தனிக் குடுத்தனம் போகலாம் என்றால், மனைவி பார்வதி வர மறுக்கிறாள். இது பெரிய சண்டையாகி தீராத மனஸ்தாபமாகிறது. இறுதியில் பார்வதியும், சிவதாணுவும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று கதை முடிகிறது.

இதை நாஞ்சில் நாடன் ஒரு உயர்ந்த இலக்கியத் தரத்தில் எழுதியுள்ளார். இயலாமை,கோபம்,ஆசை,தாபம், மனக் குரோதங்கள்,பொறாமை, உளச் சிக்கல்கள் மற்றும் ஏழ்மை என்று எல்லா உணர்ச்சிகளையும் மிக அருமையாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். சில இடங்கள் மிகவும் கவித்துவமாகவும் உள்ளன.குறிப்பாக சில வரிகள்: "பாழ். எல்லாம் பாழ். தேன் துளிர்க்கும் பருவத்தில் பிணநாற்றம் வீசுகின்ற மலர்....வேகின்ற வேளையில் படீர் என்று வெடித்து விட்ட மண்குடம்..விழுதென்று பிடிக்கப் பாம்பாகப் பயமுறுத்தும் உறவுகள்..."
"காரட்டைக் கண்ட ஒட்டகமாக கிடைக்கும் கிடைக்கும் என்று, அகப்படும் அகப்படும் என்று பிடித்துவிட ஓடிய ஓட்டம். முடிவில் நயவஞ்சகக் கும்பல்."

மேலும் தன் பாட்டியின் இறப்பின் போது சிவதாணுவின் நினைவுகள்,காந்திமதி, ராமநாதன் (வேலை செய்யும் இடத்தில கிடைத்த நல்ல நண்பர்கள்)பார்வதி வீட்டிற்கு சென்று வந்த விபரத்தை வாசகனின் கற்பனைக்கு விடுவது, பாத்திரப் படைப்புக்களில் சிறிதும் சுருதி பிசகாத ராக ஆலாபனை போன்ற சித்தரிப்பு மற்றும் சுகமான நாஞ்சில் நடை என்று பல சிறப்புகள் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாவலை கட்டாயம் படிக்க சிபாரிசு செய்கிறேன்.(நீ என்ன கா.நா.சு வா, ஜெமோவா,எஸ்ராவா என்று கேட்காதீர்கள்?). நான் படித்தவரை தமிழில் இது ஒரு முக்கியப் படைப்பு என்பதில் எனக்கு சிறுதும் சந்தேகமில்லை.

இப்போது சில கருத்துகள்: ஒன்று, இந்தக் கதையை முடித்த விதம்(முடிவல்ல) சிறிது செயற்கையாக இருக்கிறது. இரண்டாவது, கதை நடந்த கால கட்டத்தில் இருந்த வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் வரதட்சணை பற்றி சிறிது விரிவாக எழுதி இருக்கலாம். ஆனால் 30 வருடங்களுக்குப் பிறகும் இந்த ஆக்கம் படிக்கப் படுவதற்கு முக்கியக் காரணம் மனித உறவுகளில் உள்ள சிக்கல்கள், தவறானக் கணக்குகள் விவரிக்கப் படும் விதம் மற்றும் எழுத்து நடை என்று கூறலாம்.

இந்த நாவல் "சொல்ல மறந்த கதை" என்று சினிமாவாக வந்துள்ளது. ஆனால் இந்த நாவல் சினிமாவை விடவும் பலமடங்கு சிறப்பாக இருக்கிறது. படமும் அப்படி ஒன்றும் மோசமில்லை

இந்த ஆக்கம் ஜெயமோகன் மற்றும் எஸ்.ரா பட்டியல்களில் இடம் பெறுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நாஞ்சில் நாடனுக்காக வலைத்தளம் நடத்தி வரும் சுல்தான் அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு. நாஞ்சில் நாடன் ஒருவேளை நன்றாக சமைக்கத் தெரிந்தவராக அல்லது நன்கு ரசித்துச் சாப்பிடக் கூடியவராக இல்லை இரண்டும் கலந்த கலவையாக இருக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டில் தமிழில் நடைபெற்ற மிகப் பெரிய இலக்கிய நிகழ்வாக இவருக்குக் கிடைத்த "சாகித்ய அகாடமி" பரிசைக் குறிப்பிடலாம். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக