புதன், 23 ஜூன், 2010

சிங்கப்பூர் பயணம்



நீண்ட விடுப்புப் பயணம் செய்வதற்கு முன் பல சொந்த ஏற்பாடுகள், அலுவலக நெருக்கடிகள் என்று சில தொல்லைகள் இருந்தாலும் பயணத்தில் கிடைக்கும் அனுபவங்கள் சுவையானவை. டேடிராய்டிலிருந்து ஹூச்டனுடன் பயணம் தொடக்கம்.

அருகில் அமர்ந்தவருடன் ஒரு புன்சிரிப்பு. சில நிமிடங்களில் சகஜமாக உரையாடல். அசீட்டர் (Aceter) என்ற பெயர் கொண்ட அவர் "plant breeding" என்ற பிரிவில் ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் பேசிய விதம் இங்கிலாந்துக்காரர் போல இருந்தது. விசாரித்ததில் தென் ஆப்ரிகர் என தெரிய வந்தது. உடனே தென் ஆப்பரிக்க இன்றைய நிலைமை பற்றி கேட்டு அறிந்தேன்.

மண்டேலா இருந்த வரை மிகவும் நியாயமாக இருந்த அரசு இன்று அப்படியில்லை என்றார். இன்று"நேர்மாறான வித்தியாசப்படுத்துதல்" (reverse discrimination) நடந்து வருவதாக அசீட்டர் கூறினார். இதை தென்னாப்ரிகவைச் சேர்ந்த கறுப்பர்களிடம் பேசாமல் உண்மை அறிய முடியாது. எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு எங்களை பழிவாங்குவது முறையில்லை என்றார். அதனால் அவருக்கு சொந்த நாட்டில் படிக்க இடம் கிடைக்காமல் அமெரிக்காவில் படிக்க வேண்டிய நிலை என்றார். இன்னும் சிறிது ஆண்டுகளில் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்.

பிறகு கிரிக்கெட் பக்கம் பேச்சு திரும்பியது. 2003 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்த்ததாகக் கூறினார். அந்த விளையாட்டில் டெண்டுல்கரின் விளையாட்டைப் பற்றி நினைவு கூர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.



ஸ்மித் ஒரு நல்ல கேப்டன் இல்லை என்றும் அமெரிக்காவில் அதிகம் கிரிக்கெட் விளையாட முடியவில்லை என்றும் இருவரும் நினைத்தோம். பழைய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களை (Barry Richards, Pollock) பற்றி நான் பல தகவல்களை பகிர்ந்து கொண்டேன்.

பிறகு நானும் ஒரு ஆராய்ச்சி மாணவனாக இருந்ததால் பொதுவாக ஆராய்ச்சியைப் பற்றி பேசினோம். கணிதத்தை எப்படி அவர் ஆராய்ச்சியில் பயன்படுத்தலாம் என்று சில கருத்துப் பரிமாற்றம். கணிதத்தை எப்படி அவர் ஆராய்ச்சியில் பயன்படுத்தலாம் என்று சில கருத்துப் பரிமாற்றம். எல்லா நாட்டிலும் பிரச்சனைகள். இந்தியாவில் ஜாதி மற்றும் மொழி.
தென்னாப்ரிக்காவில் நிற வெறி.

ஆனால் இயற்கைச் செல்வங்கள் எங்கு இருக்கிறதோ அந்த நாட்டின் விவகாரங்களில் மற்ற நாடுகள் குறிப்பாக அமெரிக்கா தலையீடு உள்ளது. இறுதியில் எல்லாம் பணம் படுத்தும் பாடு தான். உதாரணத்திற்கு தென்னாப்ரிக்காவில் கிடைக்கும் வைரம் இங்கிலாந்து மூலம் தான் விற்பனையாகிறது.

இன்றுள்ள ஜிம்பாபுவே நிலைமையைப் பாருங்கள். எத்தனை பட்டினிச் சாவுகள். துயரம் ஒரு தொடர் கதை தான்.


ஒருபுறம் தமிழுக்கு செம்மொழி மாநாடு. மறுபுறம் மலேசியா மற்றும் இலங்கையில் தமிழர்களின் தீராத அல்லல்கள்.

கனமான மனதோடு ஹூஸ்டன் விமான நிலையத்தில் இறங்கினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக