ஞாயிறு, 7 மார்ச், 2010

அடுத்த "நித்யா"வின் நிகழ்தகவு


அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுவது மக்களின் அன்றாட வாழ்கையின் ஒரு பகுதி. அந்த மாதிரியான செய்திகள் இன்று பெரிய அளவில் சமூகத்தில் தாக்கத்தை உண்டாக்குவதில்லை.

அதே நேரத்தில் சீட்டுக் கம்பெனிகளிடமும், போலி சாமியார்களை நம்பி ஏமாறுவதும் அடிக்கடி வந்து போகும் செய்திகள். சில நாட்கள் பரபரப்பு. பின்பு மீண்டும் அதே கதை. இது எல்லாமே துன்பமில்லாத வாழ்வு, குறுகிய காலத்தில் பணம் சம்பாரித்து சுகமான வாழ்கையை அமைத்துக் கொள்ள ஆசைப்படும் சாதாரண குடிமகனின் முயற்சியின் விளைவு. இதில் துன்பமே மிஞ்சுவது தான் பரிதாபம்.

சரி. அடுத்த முறை ஒரு சாமியாரையோ அல்லது அதிக வட்டி கொடுக்கும் தனியார் நிறுவனத்தையோ தேர்ந்தெடுக்கும் போது, ஏமாற்றம் அடைய நிகழ்தகவு என்ன? இது எங்களுக்கே தெரியும் என்று இதை படிப்பவர்கள் நினைக்கலாம். இங்கு தான் கணிதம் நமக்கு கைகொடுக்குமா என்று பார்ப்போம். லாப்லாஸ் (Laplace) என்ற கணிதமேதையை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். லப்லாசின் தொடர் வெற்றி விதி (Laplace Law of succession) என்பதை பயன்படுத்தி ஒரு முடிவுக்கு வரலாம்.

லாப்லாஸ் விதி என்ன சொல்கிறது. மொத்தமாக நடந்த பழைய n நிகழ்வுகளில் r நிகழ்வுகள் வெற்றி பெற்றால், அடுத்ததாக நடக்க உள்ள n+1 நிகழ்வின் வெற்றியின் நிகழ்தகவு (r+1)/(n+2). உதாரணமாக, உங்களுக்கு பிடித்த இயக்குனர் பத்து படங்கள் எடுத்துள்ளார். அதில் ஆறு படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அவருடைய அடுத்த படம் வெற்றி பெற நிகழ்தகவு 7/12.
இதேபோல் அடுத்த நித்யாவிடம் ஒருவர் ஏமாறுவதற்கான நிகழ்தகவு என்ன? அது ஒருவரின் அனுபவத்தைப் பொருத்தது. 200 சாமியார்களில் 121 சாமியார்கள் ஏமாற்றியுள்ளர்கள் எனக் கொண்டால், அடுத்த சாமியார் ஏமாற்றுவதற்க்கான நிகழ்தகவு 122/202=61/101=0.603. எச்சரிக்கை. ஞானத் தேடலில் தோல்விகள் அதிகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அது எப்போதுமே வெற்றியாகவோ, தோல்வியாகவோ முடிய வாய்ப்பில்லை.

நித்யாவைப் பற்றி பேசும் போது சாருவைப் பேசாமல் இருக்க முடியாது. சாரு இரண்டு முறை கடவுளைக் காண முயற்சித்து தோல்வி அடைந்துள்ளார். அடுத்த முறை அவர் வாசகர்களுக்கு யாரையாவது கைகட்டினால் வாசகர்கள் ஏமாறுவதற்கான நிகழ்தகவு 75%.

லாப்லாஸ் விதியைப் பற்றி எழுத வாய்ப்பளித்த நித்யாவுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்.

1 கருத்து:

  1. ///200 சாமியார்களில் 121 சாமியார்கள் ஏமாற்றியுள்ளர்கள் எனக் கொண்டால்/////

    200 க்கு 200ம் இது போலத்தான் இருக்கு. அதனால் இந்த விசயத்தில் நிகழ்தகவு தேவையில்லை.

    பதிலளிநீக்கு