ஞாயிறு, 22 மார்ச், 2009

இந்திரா பார்த்தசாரதியின் "ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன"



இந்திரா பார்த்தசாரதியின் (இ.பா.) "ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன" என்ற நாவலை சமீபத்தில் படித்தேன்.தி.ஜானகிராமன் முதல் பதிப்பிற்கு முன்னுரை எழுதி இருக்கிறார்.அமிர்தம்,திலகம்,நித்யா,பானு மற்றும் பானர்ஜீ முக்கிய கதா பாத்திரங்கள்.அமிர்தம் ஒரு மத்திய அரசாங்க அதிகாரி.டெல்லியில் தன் மனைவி திலகத்துடன் வசித்து வருகிறார்.திலகம் கருப்பு நிறம்,சினிமா,டிராமா,கணவனுக்கு சமைத்து போடுவது மற்றும் கணவன் தனக்கு மட்டும் தான் என்ற நினைப்புடன் வாழும் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கப் பெண்.கல்யாணமாகி 12 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதது வேறு திலகத்திற்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துகிறது..அமிர்தம் சற்று வித்தியாசமான மிகவும் உணர்ச்சி வயப்பட்டு முடிவுகள் எடுக்கும் ஒரு பாத்திரம். திருமணத்திற்கு முன் நித்யா என்ற பெண்ணுடன் காதலுடன் கூடிய ஒரு பழக்கம் இருக்கிறது அமிர்தத்திற்கு.உணர்ச்சி வேகத்தில் நித்யாவுடன் உள்ள உறவை விட்டு,தன் சொந்தகார பெண்ணான திலகத்தை மணக்கிறான்.வழக்கமான வாழ்க்கைப் பயணத்தில் நாடகத்தில் நடிக்கும் பானுவைப் பார்த்தவுடன் அமிர்தத்திற்கும் திலகத்திற்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படுகின்றன.அவர்கள் மத்தியில் நிகழும் மனப்போராட்டங்கள் மற்றும் உளவியல் ரீதியில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை மிக அழகாக இ.பா. சித்தரித்திருக்கிறார்.


பானுவைப் பார்த்தவுடன் அமிர்தத்திற்கு நித்யாவை பார்த்து போல் இருக்கிறது.தன் பழைய காலத்து நினைவுகள் தொல்லை கொடுக்கிறது.நாடகம் முடிந்தவுடன் அமிர்தத்திற்கு தற்செயலாக பானுவை அவள் வீட்டில் காரில் இறக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.அப்போது அவள் பேசும் முறை கூட நிதயாவைப் போல் இருப்பதாக உணர்கிறான் அமிர்தம்.பானுவிற்கும் அமிர்தத்திற்கும் இடையே அடிக்கடி பேசுவது பழகுவது என்று உறவு தொடர்கிறது.பானுவின் அம்மாவிற்கு அது பிடிக்கவில்லை.பானு அம்மா அவள் அப்பாவை விட்டு பிரிந்து வந்ததால், பானுவின் வாழ்க்கை அவள் அம்மாவுடன் கழிகிறது.பானுவிற்கு அவள் அம்மாவைப் பிடிக்கவில்லை.அவளை விட்டு பிரிந்து வரவேண்டும் என்று எண்ணுகிறாள்.திலகத்திற்கும் அமிர்தத்தின் மேல் சந்தேகம் வலுக்கிறது.

வாழ்கையில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கலாம்.ஆனால் பின்னால சென்று அந்த வாழ்க்கையை பானுவுடன் வாழ அமிர்தம் முயற்சிக்கிறான்.அது விவேகமானதா மற்றும் நடை முறை சாத்தியமா போன்ற நுணுக்கமான கேள்விகளுக்கு விடை அறியும் முயற்சி தான் இந்தக் கதை.இது கிட்டத்தட்ட 40௦ ஆண்டுகளுக்கு முன் இருந்த நடுத்தர வர்க்க தமிழ் சமுதாயத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை சித்தரிக்கிறது.

திலகத்தை விவாகரத்து செய்து விட்டு, என்னுடன் வாழ முடியுமா என்று பானு கேட்டவுடன் வாழ்கையின் உண்மையை உணர்கிறான் அமிர்தம்.இந்தக் கதையில் வரும் பானர்ஜீ மூலமாக இ.பா. பேசுகிறார் என்று எனக்குத் தோன்றியது.
"இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே நிகழும் போராட்டத்துக்கு வாழ்கை என்று பெயர்.மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதே அவன் வெற்றி.மரணமே அவன் தோல்வி.ஆகவே போராட்டம் என்பது பௌதீக ரீதியில் தான் இருக்கும்.மனம் கற்பித்துக் கொள்ளும் பயங்கரமான சிக்கல்களுக்கு, அவன்தான் பொறுப்பே ஒழிய இயற்கையல்ல" என்ற பானர்ஜீயின் கூற்று எனக்கு மிகவும் பிடித்தது. மேலும் பானர்ஜீ "நீ எதைச் செய்வதாக இருந்தாலும் நாணயமாகச் செய்" என்று அமிர்தத்திற்கு அறிவுறுத்துவது எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திலும் பொருந்தக் கூடிய ஒன்று.

இறுதியில் டெலிபோன் மணி அடிப்பதுடன் கதை முடிகிறது.வாசகனிடம் விடப்பட்ட முடிவு.படித்து முடித்தவுடன் பலவிதமான எண்ணங்களுக்கு வித்திடுகிறது.
இந்த கதையை நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்கள் தான் படிக்க முடியும்.சிறுது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அங்கங்கே தலை காட்டுகிறது.அதுவும் கதையின் தேவையைப் பொறுத்தே.விறுவிறுப்பு குறையாமல் எழுதப்பட்ட இதை கட்டாயம் படிக்கலாம்.

இப்போது இந்த புத்தகம் கிழக்குப் பதிப்பகத்தில் கிடைக்கிறது.
அதற்கான சுட்டி:
http://nhm.in/shop/978-81-8368-137-7.html
Details ISBN 978-81-8368-137-7
Weight 170.00 gms
Book Title Helicoptergal Keezhe Irangi Vittana
Pages 144 Format Printed Book Year Published 2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக